இன்ஜினீயரிங் கவுன்சிலிங்

இன்ஜினீயரிங் கவுன்சிலிங்! லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் முதல் புள்ளி. தரமான கல்வி கற்பித்து, சிறந்த வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களில் சேர இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான் ஒரே வாசல். நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமேதான் கவுன்சிலிங்கில் பரிசீலிக்கப்படும்.

கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் முன் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.

கட் ஆஃப் மதிப்பெண்கள்!

ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும்.
ப்ளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!.... உதாரணத்திற்கு…

இயற்பியல் மதிப்பெண் 190/200 எனில் 190 /4 =47.50 (50-ற்கு)
வேதியியல் மதிப்பெண் 185/200 எனில் 185/4 =46.25 (50-ற்கு)
கணிதம் மதிப்பெண் 194/200 எனில் 194 /2 =97 (100-ற்கு)
ஆக, உங்களது கட் ஆஃப் மதிப்பெண் 200ற்கு 190.75

‘ரேண்டம் நம்பர்’ என்றால் என்ன?

சரிசமமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் ‘ரேண்டம் நம்பர்’ (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.

கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக் கிறார்களோ, அவருக்கு அதிகபட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக் கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பருக்கு வேலை வரும்.இருவருக்கும் வழங்கப்பட்ட ரேண்டம் நம்பரில் எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான் இந்த ரேண்டம் நம்பர் பயன்பாட்டுக்கு வரும். இதனால், நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது!

கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…

கவுன்சிலிங்கில் ஒரு முறை கல்லூரியையும், பாடப் பிரிவையும் தேர்வு செய்துவிட்டால், அதுவே இறுதியானது. மாற்ற இயலாது.
தவிர்க்க இயலாத காரணங்களால் கவுன்சிலிங்குக்கு வர முடியாத மாணவர்களுக்குப் பதிலாக, அவர்களின் பெற்றோர் கலந்துகொள்ளலாம். அந்தச் சமயத்தில் பெற்றோர் எடுக்கும் முடிவே இறுதியானது.

கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. முறையான அங்கீகாரம்!
2. காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.
3. பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
4. கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.
5. படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.

பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!

சில கேள்விகள்… சில விளக்கங்கள்!

1. “கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அங்கு போதிய வசதிகள், தரமான கல்வி அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?”
“முதல் வருடம் அந்தக் கல்லூரியில் படித்துவிட்டு மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு இரண்டாவது வருடப் படிப்பை வேறு ஒரு கல்லூரியில் தொடரலாம்!”

2. “ப்ளஸ் டூ தேர்வில் ஃபெயில் ஆகி உடனடிச் சிறப்புத் தேர்வு எழுதியவர்கள், தக்க மதிப்பெண்கள் இருந்தால் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியுமா?”
“முடியும். அவர்களுக்கென்று தனியாக ‘சப்ளிமென்ட்டரி கவுன்சிலிங்’ நடக்கும். அதைப்பற்றிய விவரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்!”

3. “வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள பெற்றோருடன் வரும் மாணவர்களுக்கு அரசு ஏதேனும் பயணப் படிகள் தருகின்றனவா?”
“வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும்!”

4. “தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அடுத்து வரும் நாட்களில் கலந்துகொள்ள முடியுமா?”
“கலந்துகொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ரேங்க் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நாளைத் தவறவிட்டதால், அடுத்து வரும் நாளில் எந்தக் கல்லூரியில், என்ன படிப்பு இருக்கிறதோ, அதில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும்!”

டாப்- 5 பொறியியல் படிப்புகள்!

வேலைவாய்ப்பு, சம்பளம், எதிர்கால வளர்ச்சி எனப் பல கோணங்களில் மாணவர்களிடையே ‘மோஸ்ட் வான்டட்‘ பொறியியல் படிப்புகள் அந்தஸ்துடன் இருக்கும் டாப்-5 கோர்ஸ்கள் இவை!

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்

இயந்திரங்களோடு பணியாற்றக் கற்றுத்தரும் படிப்பு. பெரிய தொழிற்சாலைகள், இயந்திர ஆலைகள், இரும்பு ஆலைகள் போன்ற உற்பத்தி மற்றும் நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு நிச்சயம். எந்த ஒரு பொருள் கையில் கிடைத்தாலும், அதைப் பிரித்து அக்குவேறு, ஆணிவேறாக ஆராய் வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்கள் ‘டிக்’ அடிக்க வேண்டியது இந்தப் படிப்பைத்தான்.

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்

உங்களுக்கு மின்சாரம், மின்னணு போன்ற பொருட்களை ஆராய்ந்து அதன் மூலம் புதிதாக ஒரு எலெக்ட்ரானிக் சாதனத்தை உருவாக்கும் ஆர்வம் இருந்தால், இந்தப் படிப்பு உங்களுக்கு ஏற்றது. மின் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம், ராணுவம் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எவர்கிரீன் படிப்பாக இதற்கு மாணவர்களிடத்தில் எப்போதும் சிவப்புக் கம்பள வரவேற்பு!
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்
மின் இயந்திரங்களைக்கொண்டு தொடர்புகொள்ளும் அறிவியலைக் கற்றுத் தருகிற பாடம். தகவல் தொடர்பு உள்ளிட்ட வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும் படிப்பு இது!

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங்

உலகத்தைச் சுருக்கிவிட்ட கணினியைப்பற்றி எந்த அறிமுகமும் தேவை இல்லை. எந்தத் துறையிலும் கணினி பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள் ஹார்டுவேர், சாஃப்ட்வேர், புரொகிராமர் என நீள்கிறது பட்டியல்!

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி

தகவல் தொடர்பும், மென்பொருள் ஏற்றுமதியும் ஏகமாக அதிகரித்து வரும் இந்நாளில், இந்தப் படிப்புக்கு நிச்சய வேலைவாய்ப்பு உண்டு. பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் கோலோச்சி வருவதால், கையும் பையும் நிறையச் சம்பளம் என்ப தால், இதற்குத் தனி மவுசு!

இந்தப் பட்டியலில் தொடர்ந்து சிவில் இன்ஜினீயரிங், புரொடக்ஷன் இன்ஜினீயரிங், இன்ஸ்ட்ரூமென்ட் இன்ஜினீயரிங், என்விரான்மென்டல் இன்ஜினீயரிங், கெமிக்கல் இன்ஜினீயரிங் ஆகியவை இடம் பிடிக்கின்றன.

நன்றி: யூத்புல் விகடன் (2010)
http://www.thoothuonline.com/archives/65802#sthash.547unMd0.dpuf

கருத்துகள்